கவிதை:அண்ணன் தம்பி

கார சாரம்
என் சம்சாரமும்
உன் சம்சாரமும்
நம் வீட்டுக் கட்டுத்தரையில் !

ஆணாய் தடுக்கப்போன நாம்
தரையில் விளையாடினோம்
அதே இடத்தில்
எப்போதும் விளையாடியதை....

சிறு வித்யாசம் தான்!

அன்று நம்மை சுற்றி நண்பர்கள்!
இன்று உறவினர்கள்!

அன்று கிழிந்தது ஸ்கூல் சட்டை!
இன்றோ கிழிகிறது
காலை புதியதாய்
உடுத்திய பொங்கல் சட்டை!

அடுப்பங்கரையில் ஆரம்பித்தது
ஆட்டுமந்தையில் நிற்கிறது!
அடுத்து என்னவென்று
ஆவலாய் ஊர் மக்கள்!

ஏன் என எதுவும் தெரியாமல்
நம் பிள்ளைகள்
மச்சினியின் கைகளுக்குள் !
நாளை ஒன்றாய்
விளையாடுவோம் என்ற
ஆசையோடு,
அது பேராசை என்று புரியாமல் !

இருக்கும் கூரை கூர் போடப்படுமோ ?
தவிப்பில் தடம்
ஏதும் தெரியாமல் நடை
தளர்ந்த தாய் தகப்பன்
தார தாரையாய் கண்ணீருடன் !

இவை அனைத்தும் நம்மை சுற்றி நடக்க
நம் விளையாட்டு மட்டும் முடியவில்லை

தடுப்போர்
தாமதித்ததால்

ஒன்றை உணர்ந்தேன்
நீ என்னை தரையில்
தள்ளும் முன்

எங்கே நான் கீழே
விழுந்து விடுவேனோ
என்ற உன் பயத்தை !

No comments:

Post a Comment