கவிதை மாதிரி : அட எங்கய்யா போனது ?

நீதிமன்றம்,
நீதி தேவதை,
நீதிபதி,

இதுவரை ஆணியே அடித்திராத அவரது சுத்தியல்,
அரைகுறை மூங்கில் கூண்டு,
வழக்குரைஞர்,
விவாகரத்து பத்திரம்,

ஒருபுறம், பலசில கடுப்பில் கணவன்,
மறுபுறம், சிலபல கடுப்பில் மனைவி,
இருபுறமும் இவர்களை உசுப்பேத்திய உறவினர்கள்,

எல்லாம் இருக்க,
நீதிபதியின் பேனா வாலாட்ட
அனைவரின் இறுக்கம் கலைந்தது.
உறவும் உதிர்ந்தது.

இன்று
எங்கே போனது ?
அட எங்கய்யா போனது ?
அன்று சாட்சி
என்று யாருக்கும் அடங்காமல் ஆடிய
அக்னி ?.

கவிதை:மரணம்

யாரோ எங்கோ
காணவில்லை !

எனக்கென என்று
அதை கண்டுகொள்ளவில்லை !

வேலை முடிந்து
வீடு திரும்பியவனுக்கு
வீதி சொல்லியது
புருவத்தை உயர்த்தும்
புள்ளிவிவரங்களும் அவரது
பூர்வீகமும் !

காலை யார் என்று தெரியாதவர் !
மாலை மனதில் நெருங்கிய
நண்பராகிக் கொண்டு இருந்தார்
தேடுதல் வேட்டையின்
நீளம் அதிகரிக்க அதிகரிக்க !

சோகமும் சோம்பலும் சூழ்ந்தது
சொன்னதையே சொல்லிக்கொண்டு
இருந்தது தொலைக்காட்சிப்பெட்டி !

இப்படியே கடந்தது நேரம் !
இரவு இறந்து
விடியல் பிறந்தது !

தொலைக்காட்சிப்பெட்டி
சொன்னதையே சொல்லிக்கொண்டு
இருந்தாலும் அதை
விட்டு விலக
மறுக்கிறது மனம் !

தாமதமாய் அலுவலகம்
கிளம்பும் முன்
கிடைத்தது தகவல்
கிடைத்துவிட்டது அவரது
வாகனம் என்று !

உடலின் உயிர்களை பற்றி
உண்மைகள் சொல்வதற்குள்
விரைந்தேன் அலுவலகத்திற்கு !

பார்ப்பவர்கள் அனைவரின்
கலங்கத் தயாராக இருக்கும்
கண்களும் !
உடைந்த குரல்களும், சொன்னது, அந்த
பெரியமனிதர் இவர்களுக்கும்
நண்பர் ஆனா கதையை !

ஒருபுறம் வந்தவண்ணமாய்
தொலைபேசியின் அலறல்கள் !
மறுபுறம் கூட்டம் கூட்டமாய்
நண்பர்கள் !

அவர்களது உதடுகள் முனுமுனுக்கிறது
அவரது சரித்திரத்தை !

இப்படியே கடந்தது
காலை வேலை !

வந்து சேர்ந்தது
அனைவரும்
அரைகுறையாய் எதிர்பார்த்த
அந்த செய்தி !

எங்களின்
நெருங்கிய
நண்பர்
விடைபெற்றார்
என்று !

அனைவரின் உடல்
அசைவுகளையும் அடக்கியது
சோகம் !

சிறிது நேரம்
கடந்தது இப்படியே !

பிறகு

மின்னலாய் வந்தது
மற்றொரு செய்தி !

இன்றும் நாளையும்
விடுமுறை என்று !

அனைவரின்
கண்ணில் தெரிந்த சோகம்
மறந்து போனது !

மீண்டும் மலர்ந்தது
முன்னுக்குப் பின்னான
முப்பத்திரெண்டு பற்களும் !